விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் தகுதி சுற்று ஆட்டங்கள் முடிந்து பிரதான சுற்று நடந்து வரும் நிலையில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி 15 வயது வீராங்கனை கோரி காஃப் சாதனை படைத்துள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து 15 வயதான கோரி காஃப் போட்டியிட்டார். ஐந்து முறை விம்பிள்டன் பட்டம் வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெறுவார் என்றே அனைவரும் கருதினர். ஆனால் 6 - 4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி வீனஸிற்கு அதிர்ச்சியளித்தார். இரண்டாவது சீட்டிலும் அதிரடியாக ஆடிய கோரி காஃப், அதையும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்த கோரி காஃப் ஆனந்த கண்ணீர் வடித்தார். அவருக்கு சக வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது குறித்து கோரி காஃப் கூறுகையில், 'இந்த வெற்றியை எப்படி எடுத்துக் கொள்வது என தெரியவில்லை. இது போன்ற வெற்றியை பெறுவேன் என்று ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. எனது பெற்றோர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். வீனஸ் என்னை வாழ்த்தி ஊக்கமளித்தார்' என்றார்.