டெல்லி மெட்ரோ ஸ்டேஷன் அருகே பெரும் தீ விபத்து... 27 பேர் கருகி பலி...

தலைநகர் டெல்லியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நான்கு மாடி வணிக வளாகம் நேற்று மாலை பெரும் தீ விபத்திற்குள்ளானது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 27 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், காணாமல் போன 19 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நான்கு மாடி கட்டடத்தின் முதல் தளத்தில் சிசிடிவி மற்றும் ரவுட்டர்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குதான் நேற்று மாலை 5 மணி அளவில் முதலில் தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் இருந்து கட்டடம் முழுவதும் பரவிய தீயை அணைக்க நேற்று இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட கடையின் உரிமையாளர்கள் ஹரீஷ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வணிக வளாகத்தின் உரிமையாளர் மனிஷ் லக்ரா தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணியை காவல்துறையினர் தீவிரப் படுத்தியுள்ளனர். பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கட்டடத்தில் உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்து ஏற்பட்ட வேளையில் இரண்டாம் தளத்தில் தன்னம்பிக்கை பேச்சாளர் பங்கேற்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்க அங்கு பலர் குழுமியிருந்துள்ளது. எனவே, இங்குதான் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

குடியரசு தலைவர் ராம் நாத் கோவித், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு, மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நேரில் சென்று பார்வையிடவிருக்கிறார்.

இன்னும் 15க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தொடர்வதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.