சினிமா ரசிகர்கள் கொண்டாடும் மோகன்லால்-இன்  'மணிச்சித்ரதாழ்' வெளியாகி 27 ஆண்டுகள் நிறைவு!!

மலையாள திரையுலகில் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என பெருமையுடன் அழைக்கப்படுவது மணிசித்திரதாழ். இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குனர் பாசில். இவர்  தமிழில் தளபதி விஜய்யின் காதலுக்கு மரியாதை திரைப்படத்தினை இயக்கியவர். தற்போது மலையாள மற்றும் தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவரான பகத் பாசிலின் தந்தையும் இவரே.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கும்.
தற்போது ஊரடங்கினால்  தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பல திரைப்படங்கள் ஆன்லைன் தளங்களில் வெளியாகி வருகின்றன. ஆந்தாலாஜி  என்ற பெயரில் பல இயக்குனர்கள் ஒன்றிணைந்து குறும் படங்களை மற்றும் முழு நீள திரைப்படங்களை இயக்கி, வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் 27 ஆண்டுகளுக்கு முன்னரே பிரியதர்ஷன், சிபி மலையில், சித்திக் மற்றும் பாசில் போன்ற இயக்குனர்கள் இணைந்து எடுத்த திரைப்படம் இதுவாகும்.

பிரியதர்ஷனின் ஆதர்ச நாயகனான மோகன்லால் இத்திரைப்படத்தில் தனது தனிச்சிறப்பை வெளிப்படுத்தியிருப்பார் மற்றும் இத்திரைப்படத்தின் உயிர்நாடியாக கருதப்படுவது நடிகை ஷோபனாவின் நடிப்பு. இத்திரைப்படம் நடிகை ஷோபனாவிற்கு தேசிய விருதை வாங்கித்தந்தது.தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் சந்திரமுகியாக உருவானது. கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் இத்திரைப்படம் ரீமேக்  செய்யப்பட்டு வெளியானது. மணிச்சித்ரதாழ் 27 வருடங்களை நிறைவு செய்ததை மோகன்லாலின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.