ஒரே போட்டியில் 5 அறிமுக வீரர்கள்... ட்ராவிட் அதிரடி!!

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி B அணி 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றி உள்ளது. விராட் கோலி தலைமையில் சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் தவான் தலைமையிலான இந்திய இளம் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது.

இந்தியா பி டீமை இலங்கை அனுப்பி நம்மை சிறுமை படுத்தி உள்ளார்கள் என்று முன்னாள் வீரர் ரனதுங்கா விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும்படியாக இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்ததியுள்ளது. இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் 5 வீரர்கள் புதிதாக களமிறக்கப்பட்டனர். கிருஷ்ணப்பா கவுதம், நித்திஷ் ரானா, சேத்தன் சக்கர்யா, ராகுல் சாஹர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய 5 இளம் வீரர்கள் இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் ஒரே நேரத்தில் அறிமுகமாகினர்.

இந்திய அணியில் 1980-க்கு பிறகு 5 வீரர்கள் ஒரு நாள் போட்டியில் அறிமுகமாவது இதுவே முதன்முறையாகும். மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் திலிப் ஜோஷி, கிர்த்தி அஷாத், ரோஜர் பின்னி, சந்தீப் பட்டில் மற்றும் திருமலை ஸ்ரீனிவாசன் ஆகியோர் களமிறங்கினர். அதன்பின் தற்போது தான் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் 5 வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர்.

இதனிடையே இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி வீரர்கள் இலங்கை பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை கொடுத்து தடுமாறினார்கள். இறுதியாக 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணி சார்பில் ப்ரித்திவ் ஷா 49, சஞ்சு சாம்சன் 46 மற்றும் சூர்யகுமார் யாதவ் 40 ரன்களில் அவுட்டாகினர். 

இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நிதானமாக விளையாடியது. தொடக்க வீரர் அவிஸ்கா பெர்னான்டோ சிறப்பாக விளையாடி 76 ரன்கள் குவித்தார். இந்திய அணி இளம் வீரர்கள் குறைவான இலக்கு என்றாலும் இலங்கை அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 

இலங்கை அணி 39 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில ஆறுதல் வெற்றி அடைந்தது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.