5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று துவங்குகிறது

இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் '5ஜி' என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான செயல்திறனை வழங்க உறுதி அளிக்கிறது.

இந்த தொலை தொடர்புச்சேவையின்கீழ் இணையதளம் அதிவேகமாக செயல்படும். குறிப்பாக தற்போது பயன்பாட்டில் உள்ள 4-ஜி தொலைதொடர்புச் சேவையின் இணையதள வேகத்தை விட இந்த 5ஜி தொலைதொடர்புச்சேவை இணையதள வேகம் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் (இன்று) 26-ந்தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

2023க்குள் மக்களுக்கு 5ஜி சேவையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறும். அதன் பிறகு, ரேடியோ அலைவரிசைகளுக்கான தேவையைப் பொருத்து எத்தனை நாள்கள் ஏலம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும் என்று தொலைத்தொடா்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஏலத்தில் 600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ், 2500 மெகா ஹொ்ட்ஸ், 3300 மெகாஹொ்ட்ஸ் மற்றும் 26 கிகாஹொ்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளுக்காக ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.