ஒரே ஆண்டில் 7.92 லட்சம் கோடி வருவாய் –  ரிலையன்ஸ் சாதனை!!

ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் புரிந்துள்ளது.

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனமானது, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 22.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

பம்பர் எண்ணெய் சுத்திகரிப்பு விளிம்புகள்(refining margins) ,டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சில்லறை வணிகத்தில் வலுவான வேகம் ஆகியவற்றின் காரணமாக 2022 மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.13,227 கோடியிலிருந்து ரூ.16,203 கோடியாக உயர்ந்துள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஆன்லைன் சில்லறை வர்த்தகம் மற்றும் புதிய எரிசக்தி முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்துள்ளது. சந்தை மதிப்பின் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ்,ஒருங்கிணைந்த வருவாயானது, நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 35 சதவீதம் உயர்ந்து ரூ.2.32 லட்சம் கோடியாக உள்ளது.

அந்த வகையில்,கடந்த 2021-22 முழு நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை), ரிலையன்ஸ்  நிறுவனம் ரூ.7.92 லட்சம் கோடி (USD 102 பில்லியன்) வருவாயில் ரூ.60,705 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இவ்வாறு, ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது.

இது தொடர்பாக,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ்  அம்பானி கூறியதாவது: ”கொரோனா தொற்றுநோய் சவால்கள் இருந்தபோதிலும் ரிலையன்ஸ் FY2021-22 இல் டிஜிட்டல் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனைப் பிரிவுகளில் வலுவான செயல்திறனை வழங்கியுள்ளது.

வாடிக்கையாளர் திருப்தி மற்றும் அவர்களின் சேவையில் எங்களின் இடைவிடாத கவனம், அதிக ஈடுபாடு தான் லாபத்திற்கு வழிவகுத்தது. மேலும்,எங்கள் நுகர்வோர் வணிகங்கள் முழுவதும் வலுவான வருவாய் பெற்றுள்ளது”,என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.