அதானி பவர்; ஒரே ஆண்டில் 13 கோடியிலிருந்து 4 ஆயிரம் கோடியாக உயர்ந்த லாபம்!!

அதானி பவர் நிகர லாபம் மார்ச் காலாண்டில் ரூ.4,645 கோடியாக உயர்ந்துள்ளது.

அதானி பவர் லிமிடெட், ஒரு இந்திய ஆற்றல் நிறுவனமாகும். இது இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் துணை நிறுவனமாகும். அதானி பவர் நிறுவனம் 12, 450 மெகாவாட் திறன் கொண்ட ஒரு தனியார் அனல் மின் உற்பத்தி நிறுவனம்,

இந்நிலையில், அதானி பவர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த ஆண்டு ரூ. 13.13 கோடியாக இருந்த நிலையில், கடந்த மார்ச் காலாண்டில் பல மடங்கு அதிகரித்து லாபம் ரூ.4,645.47 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 93 சதவீதம் அதிகரித்து ரூ.13,308 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ.6,902 கோடியாக இருந்தது என்று அதானி பவர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் வடமேற்கு பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இந்தியாவில் மின்சாரத் தேவை தொடர்ந்து வலுவாக வளர்ந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2021-22 ஆம் ஆண்டிற்கான மொத்த எரிசக்தி தேவை 1,380 பில்லியன் யூனிட்கள் (BU) ஆகும், இது 2020-21 நிதியாண்டிற்கான ஆற்றல் தேவையை விட 8.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. அதேபோல், 2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது,2021-22 இல் 203 ஜிகாவாட் என்ற சாதனை அளவை எட்ட,உச்ச மின் தேவை 6.7 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.