அசானி புயல் – 10 விமானங்கள் ரத்து!

அசானி புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கில் 330 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா – ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொள்ளக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து, ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அசானி புயல் காரணமாக சென்னை வரும், புறப்படும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அசானி புயல் எச்சரிக்கை காரணமாக விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசானி புயல் காரணமாக சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.