அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? – நீதிமன்றம் இன்று விசாரணை!

ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுக்குழு திங்கட்கிழமை நடைபெறவுள்ளதால் உடனே விசாரிக்க வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் தரப்பு வலியுறுத்தியது.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடைபெற்ற நிலையில்,ஈபிஎஸ் தரப்பில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்துவிட்டு தற்காலிக பொது செயலாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு வாரத்திற்கு வழக்கை தள்ளி வைக்கலாம், ஆனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதா?, பொதுக்குழுவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திட போவது யார்? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டிஸ் அனுப்பப்பட வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், விரிவான பதில்மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு  ஒத்திவைத்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. அப்போது, பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கப்படுமா? இல்லையா என்பது தெரிய வரும் என்பதால் இந்த வழக்கு விசாரணை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே, ஜூன் 23 அன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதுமட்டுமல்லாமல், ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனவும் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதே சமயம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில்,சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.