பாரத் மாதா கி ஜெய் கோஷம்: பாஜகவினரை எச்சரித்த சேகர்பாபு

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காகக் குரல் கொடுத்த இரட்டை மலை சீனிவாசன் பிறந்த தினம் இன்று ஜூலை 7ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டை மலை சீனிவாசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்குச் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதுபோன்று பாஜக சார்பிலும் இன்று அக்கட்சித் தலைவர் அண்ணாமலை இரட்டைமலை சீனிவாசன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது வருகையையொட்டி ஏராளமான பாஜகவினர் காந்தி மண்டப வளாகத்தில் காத்திருந்தனர்.

இவர்கள் அமைச்சர் சேகர்பாபு மரியாதை செலுத்திவிட்டு காரில் வரும்போது, பாரத் மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய் என கோஷம் எழுப்பினர். இதை கேட்டு காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கிவிட்ட அமைச்சர் சேகர்பாபு, நீங்கள் எவ்வளவு நேரம் கோஷமிடுகிறீர்களோ அவ்வளவு நேரம் நான் இங்கேதான் இருப்பேன். எவ்வளவு நேரம்தான் கோஷமிடுகிறீர்கள் எனப் பார்க்கிறேன் என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார். இதனால் பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டவர்கள் சிறிது நேரத்தில் அமைதியாகிவிட்டனர்.

அப்போது அவர்களை அழைத்து, “இதுவரை பாஜகவினர் இந்த விழாவுக்கெல்லாம் வந்ததில்லை. இன்று அண்ணாமலை வந்திருக்கிறார். இப்போது நான் சொன்னால் 1000 பேர் வந்து நிற்பார்கள். நீங்களும், உங்கள் தலைவரும் உள்ளே கூட உள்ளே போக முடியாது... ஜாக்கிரதை” என எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டவர்கள், சாரிண்ணே சாரிண்ணே என மன்னிப்பு கேட்டனர். தொடர்ந்து அங்கிருந்து சேகர்பாபுவின் கார் புறப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் முதல்வருடன் சேகர்பாபு மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யச் சென்ற போதும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என கோஷமிட்டனர். உடனடியாக ஜீப்பிலிருந்து இறங்கி வந்த சேகர்பாபு, “என்ன அரசியல் செய்கிறீர்களா” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்தவர்கள் இல்லண்ணே.. இல்லண்ணே.. அரசியல் செய்யல.. மனு கொடுக்கத்தான் வந்தோம்” என குரலை அடக்கினர்.
அப்போதும், நான் மனு கொடுத்தால் தாங்கமாட்டீங்க என எச்சரித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மீண்டும் அதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது சேகர்பாபுவை மேலும் டென்சன் ஆக்கியிருக்கிறது.