மெரினாவில் படகு சவாரி...! அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு...!

மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்பத்துடன் ஒளியூட்டப்படும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அணைகள் மற்றும் நீர் தேக்கங்கள் சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொன்விழா கொண்டாடும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினை மறுசீரமைக்க திட்ட ஆலோசகரின் அறிக்கை பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், சுற்றுலாத்துறை சார்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுலா விருது வழங்கப்படும் என்றும், சென்னை மெரினா கடற்கரையில், ராயல் மெட்ராஸ் யாட் கிளப் உடன் இணைந்து படகு சவாரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும். ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். ஜவ்வாது மலை பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.