'கைதி' இரண்டாம் பாகத்தில் இணையும் சகோதரர்கள்?!

'கைதி' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் கார்த்தியுடன் அவரது அண்ணன் நடிகர் சூர்யாவும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2019ம் ஆண்டு தீபாவளி வெளியீடாக 'பிகில்' படத்துடன் வெளியானது கைதி. 'மாநகரம்' படம் இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கு இது இரண்டாவது படம். இந்த படத்தில் டில்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் கார்த்தியின் சினிமா வாழ்க்கையிலும் 'கைதி' திரைப்படத்திலும் முக்கியமான ஒரு இடத்தை பிடித்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் அஜய்தேவ்கன் நடிப்பில் இந்தியிலும் ரீமேக் ஆகி வருகிறது.

இந்த படம் முடியும் போதே இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்ட கதையோடு தான் முடிந்திருக்கும். 'கைதி'க்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் 'மாஸ்டர்', கமல்ஹாசனுடன் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் 'விக்ரம்' என படங்களில் பிஸியானார். இதற்கு பிறகு அவர் மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைந்து அவரது 67வது படத்தை இயக்குவார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த படம் முடிந்த பிறகே 'கைதி2'க்கு லோகேஷ் வருகிறார் எனவும் அந்த கதையில் தான் கார்த்தியும் சூர்யாவும் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வரவிருக்கிறதாம்.

சூர்யா தற்போது பாலாவின் படம், அடுத்து வெற்றிமாறனுடன் 'வாடிவாசல்', சுதா கொங்கராவின் 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் தயாரிப்பு, மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.

கார்த்தியும் 'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்த திரைப்படங்களை முடித்து மூவர் கூட்டம் இணையும் தருணத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.