தனுஷ்கோடிக்கு படையெடுக்கும் பட்டாம் பூச்சிகள்: பூங்கா அமைத்து பாதுகாக்க கோரிக்கை

தனுஷ்கோடியில் குவிந்து வரும் வண்ணத்துப் பூச்சிகளை, பூங்கா அமைத்து பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் கடைக்கோடி எல்லையான தனுஷ்கோடி பகுதிக்கு நாள்தோறும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடியில் உள்ள புயலால் அழிந்த கட்டடங்களை பார்த்து விட்டு கடலின் அழகையும் ரசித்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் கடற்கரையில் அதிகப்படியான எருக்கன் செடிகள் வளர்ந்துள்ளது. அதில் நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் வலசை வருவதுபோல் ஒன்றன்பின் ஒன்றாக வந்து எருக்கன் செடியில் அமர்ந்து ஒய்யாரமாக ஓய்வெடுத்து வருகிறது.

தாவரங்கள் மகரந்த சேர்க்கையில் ஈடுபடுவதற்கு பூச்சிகளே முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் வண்ணத்துப் பூச்சிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் உள்ள எருக்கன் செடிகளில் நூற்றுக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் குவிந்து வருவது அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. வலசை வரும் அந்த வண்ணத்துப் பூச்சிகளை பாதுகாக்க பூங்கா அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.