மதுரைக்கே பொழுதுபோக்கு செல்லூர் ராஜுதான்: அமைச்சர் கலகலப்பு !

மதுரைக்கே பொழுதுபோக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுதான் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 6) ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. காலை கேள்வி நேரத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “மதுரையில் பொழுது போக்கு அம்சங்களே இல்லை. 20 லட்சம் பேர் மதுரையில் வசிக்கிறார்கள். அங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் அமைத்துத் தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜு என்பது நாட்டுக்கே தெரிந்த ஒரு விஷயம் என்று கூறியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அவரைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, மதுரை ஒரு சுற்றுலா நகரம். ஆனால் பொழுது போக்கு வசதிகள் இல்லை. எனவே கீழடி மற்றும் மதுரையில் உள்ள கோயில்களுக்குச் செல்ல சுற்றுலாத் துறை சார்பில் வசதிகள் செய்து கொடுத்தால் மதுரையில் சுற்றுலாத் துறை மேம்படும்” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், உறுப்பினர் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நல்ல நல்ல யோசனைகளைக் கூறியுள்ளார். அவரது ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார்.