ஒரே மேடையில் தோன்றவுள்ள முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 25க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்  ஆளுநர் ரவி ஆகிய இருவரும் ஒரே மேடையில் வரும் திங்கள் கிழமை 931 மேற்பட்டோருக்கு பட்டங்களை வழங்க உள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழா சென்னை காமராஜர் சாலையில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் வரும் 16ஆம்

தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் பி.எச்.டி என்று அழைக்கப்படும் ஆராய்ச்சி படிப்பை முடித்த 731 பேருக்கும் பல்வேறு நிலைகளில் மொத்தம் 931 பேருக்கு ஆளுநர் பட்டங்களை வழங்க உள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது நடைபெறவுள்ளது.

தமிழகத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமனம் செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு கவர்னர் மாளிகைக்கு ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளநிலையில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.