ரொனால்டாவால் சரிந்த கோகோ கோலா மதிப்பு!!

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உலக புகழ் பெற்ற போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேஜையின் மீதிருந்த கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

யூரோ 2020 கால்பந்து தொடரின் போர்சுக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்தார். தண்ணீர் குடியுங்கள் என்றும் சைகை செய்தார்.

அந்த வைரல் வீடியோவில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரொனால்டோ வந்தவுடன்  மேஜையின் மீது கோலா பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிருப்தியடைந்தார். உடனே முன்னால் இருந்த 2 கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு, தண்ணீர் பாட்டிலை தூக்கி, “அகுவா” என தெரிவித்ததோடு (தண்ணீருக்கான போர்ச்சுக்கீசிய வார்த்தை) மக்கள் குளிர்பானங்களுக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சைகை காட்டினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுகல் அணியின் மேலாளர் பெர்னாண்டோ சாண்டோஸ் கலந்து கொண்டார். இருப்பினும், மேஜையில் வைக்கப்பட்டிருந்த கோலா பாட்டில்களை அவர் அகற்றவில்லை. யூரோ 2020 போட்டிக்கான ஸ்பான்சர்களில் கோகோ கோலாவும் ஒன்றாகும். மேலும் இதற்காக ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ரொனால்டோவுக்கு எதிராக யுஇஎஃப்ஏ இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கோகோ கோலா தனது 4 பில்லியன் டாலர் மதிப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 29 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும்.