ஏர் இந்தியா விமானத்தில் 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா..!

இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ்-க்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 179 பயணிகளில் 125 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார். அனைவரது மாதிரிகளும் தற்பொழுது ஒமிக்ரான் மற்றும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,630 ஆக உயர்ந்துள்ளது. அதில் 995 பேர் குணமடைந்துள்ளனர்.

1635 பேர் ஒமிக்ரானுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் தொற்றால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.