தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு மந்தம் - கொரோனா 3வது அலை அச்சம் காரணமா?

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது. ஆனால் வழக்கமான முன்பதிவு சில நிமிடங்களிலேயே மிக வேகமாக விற்று தீர்ந்து விடும்.

ஆனால் தற்பொழுது கொரோனோ மூன்றாவது அலை வருமா நவம்பர் 4ஆம் தேதி என்ன நிலைமை என்னவாக இருக்கும் என்ற சந்தேகத்தில் பொதுமக்கள் இருப்பதால் ரயில் முன்பதிவு செய்வதற்கு ஆர்வம் காட்டவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி, கோவை, மதுரை, திண்டுக்கல் என தென் மாவட்டங்களுக்கு தீபாவளி தினத்திற்கு முன்தினம் ரயில் கிடைக்காது என்பதால் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் முன் பதிவு செய்வது வழக்கம்.

பெரும்பாலும் ரயிலில் பயணிக்கும் ரயில் பயணிகள் இந்த நாட்களுக்காக காத்திருப்பார்கள். ஆனால் இன்று இருக்கும் சூழலில் தற்போது வரை ரயில் டிக்கெட் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது. அதற்குக் காரணம் நவம்பர் மாதம் மூன்றாவது அலை வருமென்று வல்லுநர்கள் தினந்தோறும் தெரிவித்து வருவது தான் என்கிறார்கள்.

அந்த அடிப்படையில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பின்னர் ரத்து செய்யக் கூடிய சூழல் ஏற்படுமோ என்ற அச்சம் காரணமாகவும் அதேபோல் ஏராளமானோர் தற்போது வரை தங்கள் சொந்த ஊர்களில் தான் இருக்கின்றனர். இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்பதால் பலரும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு வரவில்லை. இதனாலும் டிக்கெட் முன்பதிவு குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இயக்கப்படும் ரயில்கள் நிறைவடைந்த பிறகு பொதுமக்கள் தேவை கருதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த முறை அதற்கான தேவை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தீபாவளி நெருக்கத்தில் தான் தெரிந்துகொள்ள முடியும் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள். இருந்தாலும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் கட்டாயம் இயக்கப்படும் எனவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.