மலேசியா, சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 2020 மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கினை அறிவித்தது. இதனால் இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் போக்குவரத்துக்குத் தடை மற்றும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
இதனால் வெளி நாடுகளில் பணிபுரிகின்ற இந்தியத் தொழிலாளர்கள் பலர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, நாடு திரும்பவும், மீண்டும் பணியில் சேர முடியாமலும் தவித்து வந்தனர். இந்த சூழலில் தமிழக மக்கள் அதிகம் வேலை செய்யும் அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்குத் தமிழகத்திலிருந்து நேரடியாக விமான போக்குவரத்தை இயக்க வேண்டும் என்று வெளிநாடு செல்லும் பயணிகளும், அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையைக் குறிப்பிட்டு, அந்நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேர்வுகளில், நேரடி விமான சேவை இல்லாத காரணத்தால், துபாய், தோகா, கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதன் காரணமாக, பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே, அவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய இடர்பாடுகளைத் தீர்ப்பதற்குத் தற்காலிக விமானச் சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கிடையில் தற்காலிக கோவிட் கால விமான போக்குவரத்து உடன்படிக்கையைச் செய்துகொள்ள வேண்டும்” என்றும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.