திமுக பொதுக்கூட்டங்கள்... ஐபேக்கிற்கு முன்பும் பின்பும்....

1949 செப்டம்பர் 17ஆம் தேதி திமுக தொடங்கப்பட்ட நாளாக இருந்தாலும் 1956 இல் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தான் தேர்தல் பாதைக்கு வருவது என்ற முடிவை எடுத்தது.

பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்களின் ஆதரவு ஆகியவற்றை துணையாக வைத்துக்கொண்டு பிரச்சாரத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தனர் திமுகவினர். அதன் விளைவாக 1967 ஆம் ஆண்டில் காங்கிரஸை அரியணையில் இருந்து அகற்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது திமுக. தேர்தல் பிரச்சாரத்தில் பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி காமராஜ் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி ஆச்சு,  கூலி உயர்வு கேட்டான் குண்டடிபட்டு செத்தான் என்பது போன்ற முழக்கங்களை திமுக முன்வைத்தது.

ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்றார் அண்ணாதுரை. ஆனால் தேர்தல் வெற்றிக்கு பிறகு இதை நிறைவேற்ற முடியாமல் போனதால் மத்திய அரசு மானியம் வழங்க மறுக்கிறது என கூறி திட்டத்தை கைவிட்டார். திமுக தொடங்கியது முதலே மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என கட்சியையும் தொண்டர்களையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. முன்னர் 5 மாநில மாநாடுகளும் தலா நான்கு நாட்கள் நடத்தப்பட்டன. பின்னர் 3, 2 எனக் குறைக்கப்பட்டாலும் மாநாடுகளில் தான் தங்களது பலத்தை திமுகவினர் வெளிக்காட்டி வந்தனர். திமுக வருகைக்கு முன்னர் தமிழகத்தில் கட்சி நிகழ்ச்சிகள் கூட்டங்கள் மாநாடுகள் என்பவை வரையறைக்குள் இல்லாதவை. திமுக மட்டுமே இந்த நிகழ்வுகளை ஒரு முறையான வரைக்கு கொண்டு வந்தது.

கருத்தரங்குகள், விவாதம் கலை நிகழ்வுகள், மூத்த தலைவர்களின் உரைகள், வரவேற்புரை, தலைமையுரை, முன்னுரை, நன்றியுரை என அனைத்தும் ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது.

இதற்கு பிறகுதான் பிற கட்சிகளும் இந்த வரையறைக்குள் தங்களது மாநாடு மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினர். இந்த வகையில் தமிழகத்தில் மாநாடு மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது திமுகவும் திராவிட இயக்கத் தலைவர்களும் தான் என்பதில் மறுப்பேதும் இல்லை. 

திமுக சார்பில் இதுவரை 10 மாநில மாநாடுகள் நடைபெற்றுள்ளன அதில் 5 மாநாடுகள் திருச்சியில்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. திமுகவிற்கும், திருச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு திருச்சியில் 1956ஆம் ஆண்டில் நடைபெற்ற 2-வது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டி என்ற முடிவு எடுக்கப்பட்டது. 

திருச்சி குதிரைப்பந்தய சாலையில் 1956 மே மாதம் 17, 18, 19, 20 என நான்கு நாட்களுக்கு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியினரிடம் நடத்திய வாக்கெடுப்பில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று 56 ஆயிரத்து 942 பெயர் வாக்களித்திருந்தனர். போட்டியிட வேண்டாம் என 4203 பேர் வாக்களித்திருந்தனர். இதில் கிடைத்த ஒப்புதலைத் தொடர்ந்து தான் திமுகவினர் தேர்தல் களத்தில் இறங்கினர். 

அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு 1971 இல் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தான் அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்கிற ஐம்பெரும் முழக்கங்களை முன்வைத்தார் கருணாநிதி.  ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் குளித்தலை தொகுதியில் தான் கருணாநிதி முதல் முறை தேர்தல் களம் கண்டார். 

ஆனால் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7)நடைபெற்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் எனும் மாபெரும் பொதுக்கூட்டம் அனைத்தையும் மாற்றியமைக்கும் வகையில் நடந்தேறியது. 

பொதுக்கூட்ட மேடை வடிவமைப்பு தொடங்கி தொண்டர்கள் அமரும் இடம், உணவுக் கூடங்கள், குடிநீர், கழிப்பறை, புத்தக விற்பனை, கொடி விற்பனை, நுழைவு அனுமதி என அனைத்தும் ஐபேக் குழுவின் கை அசைவில் தான் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று கவனித்த கட்சியின் முதன்மை செயலர் கே என் நேரு ஒலிபெருக்கியில் உள்ளூர்காரர்களை உள்ள ச்விடுங்கப்பா என்று ஐபேக் குழுவினரிடம் கேட்டுக்கொண்டார். தமிழ் பண்பாடு மற்றும் பெருமையை பறைசாற்றும் கலை நிகழ்வுகள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி சுகாதாரம் நகர்ப்புற வளர்ச்சி ஊரக உள்கட்டமைப்பு சமூக நீதி ஆகிய தலைப்புகளின் கீழ் தலா 3பேர் பேசுவதாக இருந்தது. ஆனால் 8 பேருக்கு மட்டும் தலா ஐந்து நிமிடங்கள் என்ற வகையில் விரைந்து பேசி முடிக்க உத்தரவிட்டது ஐபேக். கூடியிருந்த அத்தனை பேரையும் தனது கட்டுப்பாட்டில் நிகழ்வு முடியும் வரை வைத்திருந்து அந்த அணி. 
திமுக பொதுச் செயலர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மை செயலர் கே என் நேரு உள்ளிட்டோருக்கும் சில நிமிடங்கள் மட்டுமே பேசும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அனைத்தும் டிஜிட்டல் மயம், நவீனத்துவம் என்ற மாறிப்போனது. பிரம்மாண்ட மேடையிலும் அதன் அருகே 300 அடி முதல் 100 அடி வரையிலான வெள்ளித் திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள் மத்தியில் முகஸ்டாலின் உற்சாகமாக கையசைத்து நடந்து செல்லும் வகையில் 500 அடியில் நடைமேடை அமைக்கப்பட்டிருந்தது. உதயசூரியன் வடிவிலான மேடையிலிருந்து இந்த நடைமேடையில் 20 நிமிடங்கள் நடந்து சென்று பொதுக்கூட்டத்தில் திரண்டு இருந்தவர்களை கை அசைத்து உற்சாகப்படுத்தினார் மு க ஸ்டாலின். திரையில் பெரியார், அண்ணா, கருணாநிதி, திமுக குறித்து ஒலி ஒளி காட்சிகள், மு க ஸ்டாலின் பிறந்த நாள் குறித்த ஒலி ஒளி காட்சிகளும் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டன. 'ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப் போறாரு' என்ற பாடலும் அப்போது ஒலிக்க செய்யப்பட்டது. 

மாலை 5 மணிக்கு மேடை ஏறிய ஸ்டாலின் 20 நிமிடங்களுக்கு தொண்டர்களை உற்சாகப்படுத்த விட்டு தனது இருக்கைக்கு திரும்பினார். தலைவர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் அமர ஒரு மேடையும், எம்எல்ஏக்கள் எம்பிக்கள் இதர அணி நிர்வாகிகள் அமர இரு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. 
முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அமர்வதற்கு மேடைக்கு முன்பாக குஷன் சோபாக்களும் அமைக்கப்பட்டிருந்தன. 

உரை முடிந்தவுடன் வானில் வண்ண ஜாலங்கள் மின்னும் வகையில் வாணவேடிக்கை மத்தாப்புகள் ஏற்றப்பட்டது. மேலும் ஸ்டாலின் மேடை ஏறும் போதும் இன்னிசைக் கச்சேரிகளில் பயன்படுத்தும் மத்தாப்பூ ஒலிகள் டிஜிட்டல் வண்ண ஒளி மிளிர செய்யப்பட்டன.  1967இல் நவீன தமிழகத்தை உருவாக்குவோம் என முழங்கினார் கருணாநிதி இருப்பினும் மாநாடு பொதுக்கூட்டம் என்றால் திமுகவுக்கு என ஒரு வரையறை இருந்தது. 

ஐபேக் வருகைக்குப் பின்னர் இந்த வரையறை எல்லாமும் மாறிப்போனது மாற்றம் ஒன்றே மாறாதது. தனியார் பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் திமுக, வட இந்தியா நிறுவன ஆதிக்கத்தின் கீழ் தங்களது நிகழ்வுகளை ஒட்டுமொத்தமாக மாற்றிக் கொண்டிருப்பது தான் வித்தியாசமாக இருக்கிறது.