சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு இன்று (ஜுலை 2) அதிமுகவினரிடம் ஆதரவு கோரி சென்னை வருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள திருமதி திரௌபதி முர்மு, தனக்கு ஆதரவளிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாநிலங்கள் வாரியாக சந்தித்து வருகிறார்.அந்த வகையில் இன்று காலை புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் தோழமை கட்சிகளின் தலைவர்களையும் புதுச்சேரி மாநில முதல்வரையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்த பிறகு நாளை மதியம் சென்னை வருகிறார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மனு தாக்கலின் போது ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி சார்பாக தம்பிதுரையும் கலந்துகொண்டனர், இந்த நிலையில் முர்மு சென்னை வரும் நிலையில் பன்னீர்செல்வமும், எடப்பாடியும் ஒரே நிகழ்வில் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
ஏற்கனவே இருவருக்கும் இடையே கடுமையான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு குறைவு என்கிறார்கள் அதிமுகவினர். மேலும் எடப்பாடி பழனிசாமியின் துணைவியார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆலோசகர்களுடன் நேரடி சந்திப்பை தவிர்த்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அந்த வகையில் அவர் இன்று திரௌபதி முர்முவை சந்திக்க வருவாரா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. டெல்லிக்கு தம்பிதுரையை அனுப்பியதைப் போல தனது பிரதிநிதியை முர்முவை சந்திக்க அனுப்பவும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள் எடப்பாடி பழனிசாமி வட்டாரத்தில்.