பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4 ஆவது சுற்றில் 16 ஆவது முறையாக ரபேல் நடால்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ரபேல் நடால் 16 ஆவது முறையாக 4 ஆவது சுற்றிற்கு நுழைந்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஆடவர் பிரிவு 3 ஆவது சுற்றுப் போட்டியில் நடாலும் பிரிட்டனைச் சேர்ந்த கோமரூன் நோரியும் நேருக்கு நேர் மோதினர். இதில் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றிப் பெற்று 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதனையடுத்து 16 ஆவது முறையாக நடால் பிரெஞ்ச் ஓபனில் 4 ஆவது சுற்றில் விளையாட தகுதிப் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய அடுத்த சுற்றில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை எதிர்த்து விளையாடவுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஜெர்மன் வீரர் டொமினிக் கோப்ஃபெர் ஆகியோர் மோதினர். இதில், அனுபவ வீரரான பெடரர் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜெர்மனி வீரர் 7-6 என கைப்பற்ற மூன்றாவது செட்டை பெடரர் 7-6 கைப்பற்றினார். நான்காவது செட்டையும் 7-5 என கைப்பற்றினார்.

இறுதியில் பெடரர் 7-6, 6-7, 7-6, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரரை போராடி வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல மற்றொரு 3ஆவது சுற்று ஆட்டத்தில் நோவான் ஜோகோவிச் வெற்றிப் பெற்று 4ஆவது சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.