நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பினார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் வவிலக்கு சட்டமுன்வடிவை குடியரசு தலைவர் ஒப்புதல் பெற உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதல் பெற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அனுப்பியுள்ளார் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், இந்த அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளை பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இதன் முதல் படியாக நாம் அனைவரும் இணைந்து சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பி, இதுகுறித்து  மறுபரிசீலனை செய்யுமாறு ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி நீட் விலக்கு மசோதா குறித்து விவாதித்து, சில நாட்களிலேயே குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்கு மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மசோதா தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து தாமதிக்காமல் சட்டமுன்வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன் என்றார்.

இதன்பின் அனைத்துக்கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசு தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த தொடர் முயற்சிகளின் பலனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த நீட் விலக்கு மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற ஏதுவாக தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் என முதலமைச்சர் பேரவையில் அறிவித்தார். இந்த தகவலை ஆளுநரின் செயலர் சில மணி நேரங்களுக்கு முன்பாக தொலைபேசி வாயிலாக தெரிவித்ததை மகிழ்ச்சியோடு கூறுவதாக முதல்வர் தெரிவித்தார்.