நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு கோவிட் பாதிப்பு உறுதி

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்னுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ஜெசிந்தாவுக்கு மிதமான அறிகுறிகளுடன் கூடிய தொற்று இருப்பதாகவும், இவர் வரும் மே 21ஆம் தேதி வரை தனிமையில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை பிரதமர் ஜெசிந்தாவுக்கு கோவிட் அறிகுறிகள் தென்படவே, இன்று காலை அவருக்கு ரேபிட் அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் இவருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ஜெசிந்தாவின் கணவர் கிளார்க் கேபோர்டுக்கு கடந்த மே 8ஆம் தேதி கோவிட் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, ஜெசிந்தாவும் தொடர்ந்து தனிமையில் இருந்து வருகிறார். வீட்டிலிருந்தபடியே, இவர் அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், மே 21ஆம் தேதி வரை இதை தொடரவிருக்கிறார்.

இதன் காரணமாக பிரதமர் ஜெசிந்தா, வரும் வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டங்களில் பங்கேற்க மாட்டார். இவருக்கு பதிலாக துணை பிரதமர் கிரான்ட் ராபர்ட்சன் உரையாற்றவுள்ளார். அதேவேளை, வர்த்தக ஒப்பந்தத்திற்காக அமெரிக்கா செல்ல பிரதமர் ஜெசிந்தா திட்டமிட்டிருந்த நிலையில், இந்த பயணத் திட்டத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என இதுவரை தெரிவிக்கப்படவில்லை. நியூசிலாந்தில் தினசரி 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட் பாதிப்புகள் பதிவாகிவரும் நிலையில், 53 ஆயிரத்து 114 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நாட்டின் மொத்த உயிரிழப்பு தற்போது 958ஆக அதிகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் கடுமையான லாக்டவுன் விதிகளால் நியூசிலாந்தில் பாதிப்புகள் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. ஆனால் கடந்த சில மாதங்களாக ஒமிக்ரான் தொற்று பரவல் பாதிப்பு வேகமாகப் பரவி வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.