தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது தொடுத்திருந்த வழக்கில் ஜானி டெப் வெற்றிபெற்றுள்ள நிலையில், ஜானி டெப்பை தான் இன்னும் நேசிப்பதாக ஆம்பர் ஹெர்ட் தெரிவித்திருப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1984 ஆம் ஆண்டு திரைத்துறைக்குள் கால் பதித்த ஜானிக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத்தந்தது பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சீரிஸின், 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் தான். ஹாலிவுட் வட்டாரத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக கருதப்படும் ஜானி டெப் தனது 50 வது வயதில் தன்னை விட பாதி வயது குறைந்த 25 வயதேயான நடிகை ஆம்பர் ஹெர்ட் உடன் காதல் மலர்ந்தது. இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அடுத்த 15 மாதங்களில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் குடும்ப வன்முறையால் தான் பாதிக்கப்பட்டதாகவும், குடும்பத்தில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும் ஆம்பர் எழுதியிருந்தார். இந்த கட்டுரையில் ஜானி டெப்பின் பெயரை ஆம்பர் குறிப்பிடவில்லை. ஆனாலும், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் 6-வது பாகத்திலிருந்து ஜானி டெப் நீக்கப்பட்டது ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஆம்பர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார் ஜானி டெப். உலகம் முழுவதிலும் இருந்து பலராலும் நேரலையாக பார்க்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த வாரம் நிறைவடைந்தது. இதில், ஜானி டெப்பிற்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதன்மூலம், ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிபதி
உத்தரவிட்டார். டெப்பும் 2 மில்லியன் டாலர்களை ஆம்பருக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆம்பர் ஹெர்ட், "அவர் மீது எனக்கு எந்தக் கெட்ட எண்ணமோ, வெறுப்போ இல்லை. இதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். நீங்கள் எப்போதாவது யாரையாவது நேசித்திருந்தால் இதனை புரிந்துகொள்வது மிகவும் எளிதாக இருக்கும்" என்றார்.

நீங்கள் அவரை (ஜானி டெப்) இன்னும் விரும்புகிறீர்களா? என்ற நெறியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஆம்பர் ஹெர்ட்," ஆம். நான் அவரை இன்னும் நேசிக்கிறேன். எனது மனதின் ஆழத்திலிருந்து அவரை நேசித்தேன். ஆழமாக உடைந்த உறவை மீண்டும் உருவாக்க என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். என்னால் முடியவில்லை" என்றார்.

தனது முன்னாள் கணவர் ஜானி டெப் உடனான வழக்கிற்கு பிறகு மனம் திறந்துள்ள ஆம்பர் ஹெர்ட், அவரை இன்னும் நேசிப்பதாக தெரிவித்திருப்பது ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.