தமிழகத்தில் பாலியல் தொந்தரவு அதிகரிப்பது வேதனை அளிக்கிறது- ஜி.கே.வாசன்

தமிழகத்தில் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 

அதில், தமிழக அரசு, மாநிலத்தில் பாலியல் தொடர்பான தொந்தரவுகள் இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். சிறுமிகள், மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் என எந்த மகளிருக்கும் பாலியல் தொந்தரவு ஏற்படக்கூடாது. ஆனால் அவ்வப்போது மகளிருக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான தொந்தரவுகள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டே இருப்பது வேதனை அளிக்கிறது. 

மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு என்ற செய்தியானது பெற்றோர்களுக்கு கவலை அளிக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு, தயவு தாட்சணை பார்க்காமல் தவறு செய்பவர்களுக்கு உச்சகட்ட தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தூக்கு தண்டனை என்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். 

குறிப்பாக உச்சநீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள மாவட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு பிரத்யேக நீதிமன்றமாவது அமைக்கப்பட வேண்டும். தமிழக அரசு, மாநிலத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு இடம் இல்லாத நிலையை ஏற்படுத்த இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.