வாகன பதிவு முறையில் புதுமை... அறிமுகப்படுத்தப்பட்ட 'பிஎச் சீரிஸ்'!

கடந்த சில மாதங்களுக்ககு முன்பு வாகன பதிவு முறையில் 'பிஎச் சீரிஸ்' (Bharat series) என்கிற புதிய நடைமுறையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. வழக்கமான நம்பர் பிளேட்டுகளைப் போல் அல்லாது இந்த பதிவெண் முற்றிலும் வித்தியாசமானது.

அதாவது, மாநிலம் மற்றும் ஆர்டிஓ என எந்தவொரு அடையாள குறியீடும் இல்லாமல் இது தனித்துவமானதாக உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் பல மாநிலங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களின் ஊழியர்கள் பயனடையும் வகையில் இந்த பதிவெண் முறையை அண்மையில் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

ஆம், இந்த பிஎச் சீரிஸ் பதிவெண் கொண்ட வாகனங்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். புதிய மாநிலத்தின் ஆர்டிஓ-வில் பதிவு செய்யாமலே இப்பதிவெண் கொண்ட வாகனங்களை பயன்படுத்தி பயணிக்க முடியும். வழக்கமான பதிவெண் கொண்ட வாகனங்கள் தாய் மாநிலத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் அந்த மாநிலத்தில் 12 மாதங்களுக்கும் அதிகமாக இருக்கும் என்றால் அந்த மாநிலத்தில் மறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு தனி கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த செயல்முறைகள் சற்றே சிக்கலானது ஆகும். குறிப்பாக, தாய் மாநிலத்தில் இருந்து ஆவணங்களைப் பெறுவது முதல் அனைத்து மிகவும் சிக்கலானது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வந்தநிலையில் ஒன்றிய அரசாங்கம் புதிய பிஎச் சீரிஸ் வாகன பதிவு முறையை அறிமுகப்படுத்தி இந்த சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒன்றியம், மாநிலம் மற்றும் பல மாநிலங்களில் கிளைகளைக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியர்கள் தங்கு தடையின்றி மற்ற மாநிலங்களில் சென்று வருவதற்கு ஏதுவாக இப்பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இத்தகைய பதிவெண்ணையே மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஓர் நபர் நாட்டிலேயே முதல் முறையாக பெற்றிருக்கின்றார். ரோஹித் சூத் எனும் அவர் தனது ஹோண்டா சிட்டி காரில் இந்த பதிவெண்ணை பயன்படுத்தி இருக்கின்றார். பாரத் சீரிஸ் பதிவு எண் தனித்துவமான எண்களைக் கொண்டது. விருப்பத்தின் பேரில் புதிய பிஎச் சீரிஸ் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. 



பிஎச் சீரிஸ் பதிவு முறையில் முதல் இரு ஆண்டிற்கு மட்டுமே சாலை வரி வசூலிக்கப்படுகின்றது. அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான சாலை வரி குறிப்பிட்ட வாகனம் எந்த மாநிலத்திற்கு மாற்றப்படுகின்றது அந்த மாநிலத்தில் செலுத்த வேண்டும் என்பது விதியாகும். இதனை முன்கூட்டியே செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

அதாவது, இரண்டு, நான்கு, ஆறு என இரட்டை இலக்க அடிப்படையில் வரியைச் செலுத்திக் கொள்ளலாம். வழக்கமான பதிவெண்களைக் கொண்ட வாகனத்தைப் போலவே பிஎச் சீரிஸ் கொண்ட வாகனங்களையும் மிக சுலபமாக செகண்ட் ஹேண்ட் சந்தையில் விற்றுக் கொள்ள முடியும் என அரசு தெரிவித்திருக்கின்றது. இதற்கு பிரத்யேகமாக புதிய பதிவு சான்று வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய பதிவுமுறை அடிக்கடி பணியிட மாற்றம் மற்றும் வேறு மாநிலங்களுக்கு அடிக்கடி இடமாற்றமாகும் ஊழியர்களுக்கு பெரும் பலனளிக்கும் என அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இதனடிப்படையிலேயே புதிய பிஎச் சீரிஸ் பதிவு முறையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இந்த புதிய பிஎச் சீரிஸ் பதிவெண்ணில் வருடம் - பிஎச் - நான்கு இலக்க எண் - இரு ஆங்கில எழுத்துகள் ஆகியவையே பிஎச் சீரிஸ் பதிவெண்ணில் இடம் பெறும். 

YY: பதிவு செய்யப்பட்ட வருடம் எண்ணால் குறிப்பிடப்படும். 

BH: பாரத் என்பதைக் குறிக்கும் வகையில்

####: நான்கு இலக்க எண் 0000 தொடங்கி 9999 வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

XX: ஆங்கில எழுத்து (AA தொடங்கி ZZ வரை)., இவ்வாறு தான் புதிய பாரத் சீரிஸ் வாயிலாக பதிவு செய்யப்படும் வாகனங்களின் பதிவெண் காட்சியளிக்கும்.