சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு; 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு?!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து முதலீட்டாளர்களை ஈர்க்க ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அப்போது,முதல்வர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும்,இந்த மாநாடு மூலமாக ரூ.70 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தமிழகத்தில் 70 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பின்னர், 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார். இதனைத் தொடர்ந்து, பணிகள் நிறைவு பெற்றுள்ள 12 திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.