ஐபிஎல் 2022: குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (மே 19) நடைபெற்ற 67ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 169 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக விராட் கோலி - கேப்டன் டூபிளசிஸ் களமிறங்கினர். இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் டூபிளசிஸ் 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய மெக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18 பந்துகளை சந்தித்த மேக்ஸ்வெல் 5 பவுண்டர்கள் 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் குவித்தார்.

இறுதியில் 18.4 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு 170 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இன்று (மே 20) நடைபெறும் 68ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.