ஐபிஎல் 2022: லக்னோவை வெளியேற்றிய பெங்களூரு அணி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (மே 25) நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. அறிமுக அணியான லக்னோ அணி, இந்தத் தொடரில் இருந்து வெளியேற்றப் பட்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய தொடக்க வீரர்களாக டு பிளெசிஸ் - கோலி களமிறங்கினர்.

மொஹ்சின் கான் வீசிய பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார் டு பிளெசிஸ். அவரை தொடர்ந்து ரஜத் படிதார் களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த கோலி 24 பந்துகளில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ரஜத் படிதார் அரை சதம் கடந்து அசத்த மேக்ஸ்வெல் 9 ரன்களில் நடையைக் கட்டினார்.

அவரை தொடர்ந்து லோம்ரார் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு ரஜத் படிதார் உடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரவி பிஷ்னாய் வீசிய 16ஆவது ஓவரில் ரஜத் படிதார் 26 ரன்கள் குவித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய படிதார் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். லக்னோ அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த படித்தார் - கார்த்திக் ஜோடியைப் பிரிக்க முடியாமல் லக்னோ அணி பந்து வீச்சாளர்கள் திணறினர்.

கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணி 80 ரன்களுக்கு மேல் குவித்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. படித்தார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குயின்டன் டி காக், சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மனன் வோரா 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் கேப்டன் ராகுல் - தீபக் ஹூடா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் ராகுல் அரை சதம் கடந்து அசத்தினார். மற்றொரு முனையில் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீபக் ஹூடா 26 பந்துகளில் 45 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் மார்கஸ் ஸ்டோனிஸ் களமிறங்கினார். ஹர்ஷல் பட்டேல் வீசிய 18ஆவது ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் 9 ரன்களில் அவுட்டானார். கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லீவிஸ் மற்றும் ராகுல் களத்தில் இருந்தனர். 19ஆவது ஓவரை வீசிய ஹேசில்வுட் நான்காவது பந்தில் ராகுலை வெளியேறினார்.

சிறப்பான பங்களிப்பை அளித்த ராகுல் 58 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து குருனால் பாண்டியா டக் அவுட்டாகி வெளியேறினார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் லக்னோ அணியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இறுதியில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.

அகமதாபாத்தில் நாளை (மே 27) நடக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் ராஜஸ்தான் அணியுடன் பெங்களூரு அணி மோதும். இதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.