ஐபிஎல் 2022: லக்னோவை வீழ்த்திய குஜராத்!

ஐபிஎல்லில் இந்த ஆண்டு புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கான போட்டியில் லக்னோ அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச் 28) இரவு நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல் ராகுலும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்.

கே.எல்.ராகுல் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். டி காக் 7 ரன்னில் அவுட்டானார். எவின் லிவிஸ் (10), மனிஷ் பாண்டே (7) அடுத்தடுத்து அவுட்டானதால், தொடக்கத்திலேயே லக்னோ அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து தீபக் ஹூடாவும் (55) ஆயுஷ் படோனியும் (54) அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷமி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில், சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சுப்மன் கில் (0) ரன் ஏதும் எடுக்காத நிலையில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய விஜய் சங்கர் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா, மேத்யூ வேட்டுடன் ஜோடி சேர்ந்து ரன் ரேட்டை உயர்த்தி வந்தநிலையில், 33 ரன்களுக்கு கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து மேத்யூ வேட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக டேவிட் மில்லர் மற்றும் ராகுல் தேவாட்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. இந்த நிலையில் இந்த ஜோடியில் மில்லர் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் அதிரடி காட்டிய ராகுல் தேவாட்டியா 40 (24) ரன்களும், மனோகர் 15 (7) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் குஜராத் அணி 19.4 ஒவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக சமீரா 2 விக்கெட்டுகளும், அவேஷ் கான், குர்ணால் பாண்ட்யா மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

இதன்மூலம் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன் அணி அசத்தல் வெற்றி பெற்றது.