புதிய அரசியல் இயக்கம் தொடங்குகிறாரா பிரசாந்த் கிஷோர்?

பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் இயக்கம் ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்வதற்காக கட்சிகளுக்கு கள ரீதியான உத்திகளை வகுத்துக் கொடுத்து பிரபலமானவர் ஐபேக் பிரசாந்த் கிஷோர்.

பாஜகவில் தொடங்கி கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவை வெற்றி பெற வைத்தது வரை பிரசாந்த் கிஷோருக்கு பெரும் பங்கு உண்டு.
சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சிக்காக வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பிகே பணியாற்ற இருப்பதாக தகவல்கள் வந்தன. அதை வலுப்படுத்தும் வகையில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சிலமுறை சந்தித்தார். எனினும் தான் காங்கிரஸ் கட்சியில் சேரப் போவதாக வந்த தகவல்களை பிரசாந்த் கிஷோர் மறுத்தார். தன்னைவிட காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைமை தான் முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் இன்று மே இரண்டாம் தேதி பிரசாந்த் கிஷோர் தனது தனிப்பட்ட அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார் என தகவல்கள் வருகின்றன.

அவர் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், "மேற்கு வங்காள தேர்தலுக்கு பிறகு நான் எனது முந்தைய நிலையான தேர்தல் உத்தி வகுப்பாளர் என்ற அடிப்படையில் எந்தக் கட்சியுடனும் பணியாற்ற மாட்டேன் என்று அறிவித்து இருந்தேன். அதற்காக நான் எந்தத் தேர்தலிலும் பங்கேற்க மாட்டேன் என்று அர்த்தமில்லை"என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே பிரசாந்த் கிஷோர் தனது சொந்த ஊரான பிகார் மாநிலம் பாட்னாவில் தனக்கு நெருக்கமான அரசியல் நண்பர்களுடன் தீவிர ஆலோசனையில் இருப்பதாகவும் தனியாக ஒரு அரசியல் அமைப்பை அவர் தொடங்கலாம் என்றும் ஆங்கில ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.