ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி; கவுகாத்தி அணி வெற்றி!

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணி வெற்றி பெற்றது. 7-வது இந்தியன் சூப்பா் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 104-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணி ஈஸ்ட் பெங்காலை சந்தித்தது. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் 48-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் சுஹைர் கோல் அடித்தார்.

55-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் டோர்ஜீ உதைத்த பந்தை பெங்கால் வீரர் சர்தாக் கோலு தடுக்க முற்பட்ட போது அவரது காலில் பட்டு வலைக்குள் புகுந்து சுயகோலாக மாறியது. இதனால் கவுகாத்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 87-வது நிமிடத்தில் சர்தாக் கோலு பந்தை தலையால் முட்டி கோல் போட்டு பரிகாரம் தேடிக்கொண்டார். முடிவில் கவுகாத்தி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்காலை வீழ்த்தியது. 19-வது ஆட்டத்தில் ஆடிய கவுகாத்தி அணி 7 வெற்றி, 9 டிரா, 3 தோல்வி என்று 30 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியதுடன் அரைஇறுதி வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது.

இன்றைய ஆட்டத்தில் ஒடிசா  -மும்பை சிட்டி (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.