ஐ.எஸ்.எல். கால்பந்து கோப்பையை வெல்லப் போவது யார்

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் கடந்த நவம்பர் 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), கோவா அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், பெங்களூரு, சென்னை, ஈஸ்ட் பெங்கால், கேரளா பிளாஸ்டர்ஸ், ஒடிசா ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. மும்பை அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் சமநிலை வகித்ததால் (2-2) ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 3 முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, இந்த முறை புகழ் பெற்ற மோகன் பகான் கிளப்புடன் இணைந்து ஏ.டி.கே. மோகன் பகான் என்ற பெயரில் களம் கண்டது.

அந்த அணி அரைஇறுதியில் 2 சுற்று முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கோவாவில் இன்று இரவு நடைபெறும் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் ஏ.டி.கே.மோகன் பகான்-மும்பை சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.