கிட்டத்தட்ட வெற்றிடம் போன்ற சூழல் நிலவும் குழாய் ஒன்றில், 'மேக்னடிக் லெவிடேஷன்' என்கிற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பயணிகள் மணிக்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வழி செய்யும் ஹைப்பர்லூப் பாட்கள் தொடர்பான விளக்க காணொளி ஒன்றை விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இது காண்போரை வியக்க செய்துள்ளது.
காந்தத்தை பயன்படுத்தி பொருளை மேலே உயர்த்தி உந்தித் தள்ளுவதே மேக்னடிக் லெவிடேஷன் கோட்பாடு. ரயில் போல ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிப்பதற்கு பதிலாக, கார்கள் சாலைகளில் பயணிப்பது போல இந்த ஹைப்பர்லூப் பாட்கள் ஒன்றன் பின் ஒன்று வரிசையாக தனக்கான பாதையில் பயணிக்கும். பாட்களை தனித் தனி திசைகளிலோ அல்லது ஒரே திசையில் சேர்த்தோ இயக்க செய்ய முடியும்.
கடந்த ஆண்டு விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் ஹைப்பர்லூப் பாட்களை இயக்கி தன் முதல் சோதனை ஓட்டத்தை நிறைவு செய்திருக்கிறது. விர்ஜின் ஹைப்பர்லூப்பின் இந்த காணொளி வெறும் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே என ஒரு விமர்சகர் தன் கருத்தை முன் வைத்திருக்கிறார்.
"ஆயிரக் கணக்கிலான பயணிகளை ஒரு மணி நேரத்தில் ஒரே திசையில் அழைத்துச் செல்ல, ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான பாட்கள் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தேவை அல்லது மூன்று நொடிகளுக்கு ஒரு பாட் வீதம் தேவை" என அதன் சாத்தியப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
Check it out: our latest #hyperloop 101 video launches today. How does this help your understanding of how hyperloop works? pic.twitter.com/A1cnTPVZ0b
— Josh Giegel (@jgiegel) August 23, 2021
அக்கேள்வியை விர்ஜின் ஹப்பர்லூப்பிடம் கேட்ட போது,
"அது ஒரு நல்ல கேள்வி. இது தான் ஹைப்பர்லூப் அமைப்பை மற்ற போக்குவரத்து முறைகளிலிருந்து பிரித்து, தனித்தன்மை கொண்டதாக மாற்றுகிறது" என ஹைப்பர்லூப் பதிலளித்தது.
"அதிக எண்ணிக்கையிலான மக்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்ல ரயில்களை ஒன்றோடு ஒன்று இணைக்கிறார்கள். பாட்கள் அப்படி ஒன்றோடு ஒன்று இணைக்காமல், டிஜிட்டல் முறையில் இணைத்து, சாலைகளில் வரிசைகட்டிச் செல்லும் டிரக்குகளைப் போல பயணிக்கவைப்பதே இந்த தொழில்நுட்பம்.
"எனவே ஹைப்பர் லூப் அமைப்பால் ஒருவருக்கு தேவையானபோது சேவையை வழங்கவும், நேரடியாக சென்று சேர வேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்லவும் முடிகிறது. ரயில்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவு மற்றும் செயல்திறனை உணரும்போது இவையனைத்தும் சாத்தியமாகிறது" என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மின்கல மின்சாரத்தில் இயங்கும் பாட்கள் எந்த வித நச்சு வாயுக்களையும் வெளியிடுவதில்லை எனவும் விளக்கம் அளிக்கிறது விர்ஜின் ஹைப்பர்லூப்.