பறக்கத் தயாராகும் ஜெட் ஏர்வேஸ்

அடுத்த, 3 மாதங்களுக்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் விமான சேவையை துவக்க உள்ளது.

நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடன் நெருக்கடி காரணமாக, கடந்த 2019, ஏப்ரலில் விமான சேவையை நிறுத்தியது. அத்துடன், திவால் சட்டத்தின் கீழ், கடன் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கின. இந்நிறுவனத்தை, தொழிலதிபர், முராரி லாலா ஜலான் தலைமையிலான, ஜலான் - கல்ராக் அமைப்பு ஏலத்தில் வென்றது. 

இதையடுத்து, ஜெட் ஏர்வேஸ் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் பரிசீலித்தது . இந்த நிலையில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது, இந்த நிலையில் இன்று முதல் அடுத்த 90 நாட்களுக்குள் , ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவை மேற்கொள்வதற்கான ஸ்லாட்டுகளை தெளிவு படுத்திக் கொடுக்க வேண்டும் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு முன்னதாக விமானங்களின் திறன் பரிசோதனை செய்யப்படும்.

அதிகபட்ச வரம்பு துவக்கத்தில், முதலில் 25 விமான சேவைகள் மேற்கொள்ளப்படும். பின்னர் சேவைகள் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நேரத்தில் விமான சேவைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான ஸ்லாட்டுக்களையும் இந்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.