நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார்.அரசியலில் விஜயகாந்த் வழியை கமலஹாசன் பின்பற்றுவதாக தெரிகிறது.
குழந்தை நட்சத்திரம்,நடிகர்,உச்ச நடிகர் என நடிகனாய் பல நிலையும்,ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களில் பல்வேறு பரிமாணங்களும் காட்டும் கமலஹாசன் கட்சியை ஆரம்பித்தது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறார்.அரசியல் கட்சிகள் மறந்த கிராம சபை கூட்டங்களை வெளிக்கொணர்ந்து,பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்கள் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தைச் சார்ந்த அனைத்து கட்சிகளும் தங்களின் கூட்டணி குறித்தும்,அல்லது தனித்து நின்று தேர்தலை சந்திப்பது குறித்தும் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் கமலஹாசன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூட்டணி குறித்து கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் "நாடாளுமன்றத்தின் 40 தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும்.அதற்கான வலிமை எங்களிடம் இருக்கிறது" என அதிரடியாக தனது ஸ்டைலில் கூறியுள்ளார்.கடந்த 2006 -ம் ஆண்டு விஜயகாந்த் அவர்கள் தமிழகத்தில் உள்ள 234 சட்ட மன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட்டார்.அத்தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே அவர் கட்சி சார்பாக வெற்றி பெற்றாலும் அத்தகைய அரசியல் சூழலில் விஜயகாந்த் எடுத்த முடிவு மிக பெரிய முடிவாக பார்க்கப்பட்டது.அதே பாதையை இப்போதைய அரசியல் சூழலில் கமலஹாசன் கையில் எடுத்திருப்பது மிக சவாலான முடிவாகும்.