”கருணாநிதி என்னை இயக்குகிறார்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களுக்காக பணியாற்றிவருகிறோம், வீண் விமர்சனங்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்த விழாவை ஒரு மாநாடு போல் நடத்திக் காட்டியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி எனவும், கடல் இல்லாத கரூரில் கடல் போல் மக்கள் கூடி இருக்கிறார்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், எப்போதும் எதனையும் பிரமாண்டமாக நடத்திக் காட்டுபவர் செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை முன்பு எப்படி இருந்தது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது எனக் குறிப்பிட்டுப் பேசிய அவர், கரூர் என்றால் பிரம்மாண்டம். அதற்கு இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு எனத் தெரிவித்தார்.

ஓராண்டில் ஓயாமல் பணியாற்றி வருகிறோம் அதற்கு இந்த கரூர் மாவட்டம் சாட்சி அந்தளவுக்கு பணிகள் செய்து வருகிறோம். உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. சொன்னதைச் செய்தோம் அதற்குக் கரூர் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படும் என்று சொன்னோம் அதனையும் நிறைவேற்றியுள்ளோம் எனக் குறிப்பிட்ட அவர், இந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களை வாங்கும் பொருட்டு பிரமாண்டமான ஜவுளி பூங்கா அமைக்கப்படும், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என உறுதி வழங்கினார்.

மேலும், கரூரில் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும் எனக் கூறிய அவர், திமுக ஆட்சி மக்களுக்கு மனம் நிறைவு தருகிறது. வீண் விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படவில்லை மக்களிடம் சென்று மைக்கை நீட்டுங்கள் நியாயமான கோரிக்கை யார் வைத்தாலும் ஏற்றுக்கொள்வோம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இருப்பை காட்டுவதற்காக மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூறமாட்டேன் எனவும், கோடிக்கணக்கான மக்களின் வீட்டில் அறிவு என்னும் விளக்கை ஏற்ற வந்துள்ளதாகத் தெரிவித்தார்.