குஷ்பூ கோவில்... குஷ்பூ இட்லி...குஷ்பூவிற்கு என்றுமே 'வயசு 16' தான்!!!

கோலிவுட் திரையுலகத்தில், ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி கதாநாயகர்களின்  படங்களில் நடித்து, 80 மற்றும் 90 களில் அனைவருக்கும் விருப்பமான  முன்னணி நடிகையாக இருந்தவர் குஷ்பு.

குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் துவக்கிய அவர், இன்று நல்ல குடும்பத்தலைவியாக, நடிகையாக, சிறந்த அரசியல்வாதியாக, வெற்றிகரமான தயாரிப்பாளராக என பல துறைகளிலும் பன்முக வெற்றியாளராக மின்னிக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து குணச்சித்திர வேடங்கள் மற்றும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில்   கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று, குஷ்பு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.

1970ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மும்பையில் பிறந்த குஷ்பூவின் உண்மையான பெயர் நாகத் கான். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்தார் குஷ்பு. பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருந்த போதும், சஞ்சய் தத்துடன் நடித்த டர்ட்கா ரிஸ்டா திரைப்படம்  குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபு ஜோடியாக 1988ம் ஆண்டு ரஜினி, சுகாசினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு  அறிமுகம் ஆனார்.
பாசில் இயக்கத்தில், கார்த்திக்குடன் இவர் நடித்த வருஷம் 16 படம் இவருக்கு நல்லதொரு பெயரைப் பெற்றுத் தந்தது.
தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்ததைப் போலவே மிகச் சிறந்த படங்கள் மூலம் கன்னட, மலையாள ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். நாட்டாமை, கோலங்கள், அண்ணாமலை, பெரியார், வெற்றி விழா, மன்னன், சிங்காரவேலன் என இவர் நடித்த வெற்றிப் படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.கையொப்பு என்ற படத்தில் நடித்ததற்காக, 2006ம் ஆண்டு கேரள மாநிலத்தின் விருது பெற்றார் குஷ்பு.

இயக்குநர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். டிவியில் குஷ்பு தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அந்நிகழ்ச்சியில் அவர் அணிந்து வரும் விதவிதமான உடைகளுக்காகவே அந்நிகழ்ச்சி பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ம் ஆண்டு அரசியலில் குதித்தார் குஷ்பு. திமுகவில் இணைந்த அவர் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராய் தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வருகிறார்.இவருக்கு காங்கிரஸ் கட்சியினருடன் ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பாஜகவில் இணைய போகிறார் என்ற செய்திகளும் வந்த வண்ணம் உள்ளதை தொடர்ந்து மறுத்து வருகிறார்.

தற்போது அனைவரும் கவனமும் அவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ள அண்ணாத்த திரைப்படத்தை நோக்கியே உள்ளது. கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கும், இட்லிக்கு ‘குஷ்பு இட்லி' என பெயர் வைத்துப் போற்றும் அளவிற்கும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கிறார் குஷ்பு என்பது முற்றிலும் உண்மை.