உலகின் டாப் 10 பணக்காரர்கள் அடங்கிய 2022ஆம் ஆண்டுக்கான பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை. 2022ஆம் ஆண்டில் உலக அளவில் மொத்தம் 2,668 பேர் பில்லியனர்களாக உள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 12.7 லட்சம் கோடி டாலர் என சாமானியனின் தலையை சுற்ற வைக்கிறது.
இது கடந்த 2021ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை விட சுமார் 400 பில்லியன் டாலர் குறைவு தான் என்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள், கொரோனா பெருந்தொற்று, நிலையற்ற பங்குச் சந்தை போன்ற பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு பில்லியனர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், 1,000-க்கும் மேற்பட்ட பில்லியனர்களின் சொத்து மதிப்பு, இத்தனை இக்கட்டான சூழலிலும் அதிகரித்துள்ளது என்பதுதான். அதில் இந்தியப் பணக்காரர் முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோர் முதன்மையானவர்கள்.
அதே போல, கடந்த 2021ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு ஒட்டுமொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 87 குறைந்துள்ளது. ரஷ்யாவில் அதிக அளவில் பில்லியனர்கள் பட்டியலிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மீதான கடும் நடவடிக்கைகள் காரணமாக சீனாவிலிருந்து அதிகப்படியான பில்லியனர்கள் வெளியேறியுள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் சுமார் 219 பில்லியன் டாலரோடு முதலிடத்தில் எவரும் எளிதில் தொட முடியாத இடத்தில் இருக்கிறார். இரண்டாமிடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் 171 பில்லியன் டாலரோடு மின்னிக் கொண்டிருக்கிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் (பிரபல ஃபேஷன் பொருட்கள் நிறுவனமான லூயிஸ் வுட்டன் இவர்களுடையது தான்) 158 பில்லியனோடு மூன்றாமிடத்தில் இருக்கின்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி 90.7 பில்லியன் டாலரோடு உலக அளவில் 10ஆவது இடத்திலும், கெளதம் அதானி 90 பில்லியனோடு 11ஆவது இடத்திலும் இருக்கிறார்கள். ஃபேஸ்புக், வால்மார்ட் போன்ற முன்னணி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இவர்கள் டாப் இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் எனத் தனியாகப் பிரித்துப் பார்த்தால் லாரல் அழகுசாதனப் பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த ஃபிரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் குடும்பத்தினர் 74 பில்லியன் டாலரோடு முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து வால்மார்ட் குழுமத்தைச் சேர்ந்த அலிஸ் வால்டன் 65.3 பில்லியன் டாலரோடு இரண்டாமிடத்தில் இருக்கிறார்.ஜெஃப் பிசாசின் முன்னாள் மனைவி மெகென்ஸி ஸ்காட் 43 பில்லியனோடு நான்காவது இடம் பிடித்துள்ளார்.