லுலு நிறுவனம் : முதல்வரின் ஒப்பந்தத்துக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு!

முதல்வரின் துபாய் பயணத்தின்போது லுலு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தொடர்பாக முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம் என்று வணிகர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் துபாய் சென்ற போது, லுலு குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் யூசுப் அலியை அபுதாபி இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது முதல்வர் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் ஷாப்பிங் மால் அமைக்க, லுலு நிறுவனத்துடன் 3500 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலை வய்ப்பு வழங்கும் வகையில் மூன்று திட்டங்களை மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதற்கு தமிழகத்தில் சிறு சிறு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சிறு வணிகர்கள் நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று ஆட்சியில் இல்லாதபோது ஆர்ப்பாட்டம் செய்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் தமிழர்களின் வயிற்றில் அடிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று குற்றம் சாட்டியிருந்தார். .

இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வணிகர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா, "பெட்ரோல் டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டிருக்கிறது. வாடகை கட்டணம் எப்படி நிர்ணயம் செய்வது என அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். சுங்கக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழகத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் அனைத்து பொருட்களின் விலையும் 20 சதவீதம் வரை உயரக் கூடிய ஆபத்து உள்ளது. பன்னாட்டு கம்பெனிகளை நாங்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறோம். உள்நாட்டு சாமானிய வணிகர்களை, ஆன்லைன் மூலமாக தொழில் செய்வதற்கு பேரமைப்பு, தனி ஐடி விங் அமைத்து ஊக்கப்படுத்தி வருகிறோம்.

இந்நிலையில் முதல்வர் லுலு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது வணிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே முதல்வரை சந்தித்து இதுதொடர்பாக வலியுறுத்துவோம்” என்று பேசியுள்ளார்.