சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் முக்கியத் திட்டம்!!

சென்னையில் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ‘எங்கும் ஏறலாம்: எங்கும் இறங்கலாம்’ என்ற திட்டத்தைச் சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று மே 5ஆம் தேதி அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொது, தனியார் பங்களிப்புடன் ஹாப் ஆன் , ஹாப் ஆப் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற திட்டத்திற்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமான குற்றாலம் நவீன வசதிகளுடன் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் படகு போக்குவரத்தை மேம்படுத்தக் கன்னியாகுமரியில் 7 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக ஒரு புதிய படகு இறங்கு தளம் அமைக்கப்படும்.

பூண்டி அணைக்கட்டு பகுதி நீர் விளையாட்டுகள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் மற்றும் பறவைகளைக் காண பார்வையாளர் மடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

தூத்துக்குடி கடற்கரையில் நீர் விளையாட்டுகள் மற்றும் கடற்கரை விளையாட்டுகள் போன்றவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கடற்கரை சுற்றுலா தலமாக ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

சுற்றுலாத் துறை பிற துறைகளுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் புதிய சாலைகள் அமைத்தல் தற்போது உள்ள சாலைகளை மேம்படுத்துதல் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையில் ஆன்மீக கலாச்சார சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்க விரிவான திட்ட அறிக்கை 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் ஒரு நாள் திருப்பதி சுற்றுலாவுக்கு விரைவு தரிசன நுழைவு சீட்டுக்களை 150 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தொகுப்பு தமிழ்நாட்டின் முக்கிய இடங்களிலிருந்து தொடங்கப்படும்.

ஆண்டு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொருட்காட்சிகள் நடைபெறும் வண்ணம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை தீவுத்திடலில் வசதிகள் மேம்படுத்தப்படும்.

வண்டலூர், கோவளம் மற்றும் ஏற்காடு ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சிறு உணவகங்கள் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் உள்ளிட்ட முக்கியமான அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.