மணிப்பூர் நிலச்சரிவு - ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த சோகம்

மணிப்பூர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரின் நோனி மாவட்டத்திலுள்ள துபுல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் கடந்த புதன்கிழமை இரவு அன்று இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் டெரிடோரியல் ராணுவ வீரர்கள், துபுல் ரயில் நிலையத்தின் பொதுப் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி. பி.டவுங்கல் கூறுகையில், இடிபாடுகளிலிருந்து இதுவரை மொத்தம் 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை எத்தனை பேர் நிலச்சரிவில் புதையுண்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால், கிராம மக்கள், ராணுவம் மற்றும் ரயில்வே பணியாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 60 பேர் அதில் சிக்கியுள்ளனர் எனத் தகவல் கூறினார். மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து இதுவரை 13 டெரிடோரியல் ராணுவ வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் பேசியுள்ளார். மேலும், ’’நிலச்சரிவு குறித்த நிலைமையை மதிப்பாய்வு செய்தேன். மத்திய அரசின் அனைத்து ஆதரவும் கிடைக்கும் என்பதை உறுதி செய்தேன். என் எண்ணங்கள் யாவும் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்’’ என ட்வீட் செய்திருந்தார்.

நிலச்சரிவால் பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஏராளமானோர் புதையுண்டு இருக்கலாம் எனவும், அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிகிறது. மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ. 5.லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனக் கூறி உள்ளார். இரண்டு நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் காணாமல் போனவர்கள் இன்னும் சில தினங்களில் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது.