கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் மரடோனா காலமானார்....

கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியாகோ மரடோனா காலமானார். அவருக்கு வயது 60. நெஞ்சு வலி காரணமாக அவர் உயிரிழந்ததாக மரடோனாவின் வழக்கறிஞரால்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 60வது பிறந்த நாளை தனது நண்பர்களுடன் கொண்டாடிய மரடோனா, அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்டார். இதையடுத்து மருத்துவனையில்  பரிசோதித்த போது அவரது மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு அதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதையடுத்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார். இந்த நிலையில், புதன்கிழமை காலையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதன் துணை மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதனை செய்தபோதும் நின்று போன அவரது மூச்சை மீட்டெடுக்க அவர்களால் இயலவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தனது 16ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மரடோனா, கால்பாந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார்.

அவரது மறைவை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.