ஆம்னி பஸ்களில் அமைச்சர் திடீர் ஆய்வு!

விழாக்காலங்களில் குறிப்பாக சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் தங்கள் கட்டணங்களை மிக அதிக அளவுக்கு ஏற்றுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் சித்திரை திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி - ஞாயிறு விடுமுறைகள் என நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து நேற்று கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய புறப்பட்டனர்.
இதுதான் வசூல் காலம் என்ற வகையில் ஆம்னி பஸ்கள் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட நகரங்களுக்கான பேருந்து கட்டணத்தை தாறுமாறாக ஏற்றினார்கள். மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணமே 1,500 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 2,000 ரூபாய் என இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் உச்சகட்டமாகத்தான் 2,000 ரூபாய் டிக்கெட் வசூலிக்கப்பட்டது. இந்தத் தகவல்கள், புகார்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்குச் சென்றதும், வழக்கம் போல நேற்று மாலை போக்குவரத்துக் கழக இணை ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்தினார்கள்.

ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை தொடர்ந்த நிலையில் நேற்று இரவு திடீரென போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பஸ் நிலையத்துக்குள் நுழைந்தார். ஒவ்வொரு ஆம்னி பஸ் ஆக ஏறி இறங்கி உள்ளே சென்று பயணிகளைப் பார்த்து எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள், எங்கே செல்கிறீர்கள் என்றெல்லாம் விசாரித்து அதிக கட்டணத்தை உடனடியாக பயணிகளிடம் திருப்பிக் கொடுக்கச் செய்தார் அமைச்சர் சிவசங்கர்.

"அமைச்சரின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்றாலும், ஒரு கையெழுத்து போட்டு தன் அதிகாரத்தை நிரூபிக்க வேண்டிய அமைச்சர், இப்படி ஒவ்வொரு பேருந்தாக ஏறி இறங்கும் சூழல் ஏற்பட்டது அரசின் அலட்சியத்தால்தான். ஆம்னி பேருந்துகளை முறைப்படுத்தவில்லை என்றால் அடுத்தடுத்த தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு இதைவிட அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும்" என்று அச்சம் தெரிவிக்கின்றனர் பயணம் செய்த பொதுமக்கள்.