ஜி 20 அமைப்பின் மாநாடு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளார்.
ஜி 20 அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு புறப்பட்டு தனி விமானம் மூலம் இன்று காலை ஒசாகா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். ஜப்பானில் புதிய பேரரசரின் ரீவா சகாப்தம் தொடங்கிய பிறகு, இரு தலைவர்களிடையே நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவு மற்றும் நலன்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ள புதிய மன்னரின் முடிசூட்டு விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார் என்ற தகவலை மோடி தெரிவித்தார்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த தனக்கும் தன்னுடன் வந்த இந்திய குழுவினருக்கும் சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக ஜப்பான் பிரதமருக்கு மோடி நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.