நீட்: தேர்வுக்கு முன்பே தற்கொலை: அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை!

2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

நீட் தொடங்குவதற்கு முன்பாகவே தற்கொலை நிகழ்வுகள் தொடங்கியிருப்பது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் தனுஷ், கடந்த ஆண்டே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், போதிய மதிப்பெண் பெறாததால் அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. நடப்பாண்டிலாவது மருத்துவப் படிப்பில் சேரும் நோக்கத்துடன் அவர், நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்த நிலையில் தான் புதன்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட தனுஷ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் பயனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவர், அந்தக் கனவு நிறைவேறாதோ? என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி, “மாணவர் தனுஷின் தற்கொலை தனித்துப் பார்க்கப்பட வேண்டிய நிகழ்வு அல்ல. நீட் தேர்வு என்ற சமூக அநீதியின் பாதிப்புகள் இன்னும் விலகவில்லை; நீட் தேர்வு குறித்த அச்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் மனங்களில் இருந்து இன்னும் அகலவில்லை என்பதையே மாணவர் தனுஷின் தற்கொலை காட்டுகிறது. நீட் தேர்வால் கடந்த 2020-ஆம் ஆண்டில் 15 பேர் தற்கொலை செய்து கொண்டனர்; கடந்த ஆண்டில் 8 பேர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். நடப்பாண்டிலும் இது தொடர்கதையாகி விடக் கூடாது. நடப்பாண்டில் தனுஷின் தற்கொலை தான் முதலும், கடைசியுமானதாக இருக்க வேண்டும்; தற்கொலைகள் தொடர அனுமதிக்கக் கூடாது.

12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றால், அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். அமைச்சர்கள் குழு அல்லது அனைத்துக் கட்சிக் குழுவை தில்லிக்கு அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று தமிழக அரசிற்கு வலியுறுத்தியுள்ளார் அன்புமணி.