ஓசூரில் புதிய விமான நிலையம்: தொழிலதிபர்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமையவிருப்பதற்கு தொழிலதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் சர்வதேச விமான நிலையம் அமைந்திருப்பதால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் கட்டுவது கேள்விகுறியாகவே இருந்தது. இந்தச் சூழலில், ஓசூரில் விமான நிலையம் அமைக்க, பெங்களூரு விமான நிலைய நிர்வாகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து இடத்தை தேர்வு செய்வதற்கும், தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் தகுதியான நிறுவனங்களை தேர்வுசெய்ய தமிழ்நாடு தொழில் வளர்ச்சி மூலம், ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது தமிழக அரசு.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் இந்த முயற்சிகளுக்கு தொழிலதிபர்களும், பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. விமான நிலையம் அமைவதால், ஓசூரில் உள்ள பெரிய மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெருமளவு வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.