மெஸ்ஸி தொடங்கிய புதிய அத்தியாயம்!

புகழ்பெற்ற பார்சிலோனா கிளப் கால்பந்து அணி உடனான தனது 21 ஆண்டுகால பயணத்தை கடந்த வாரத்துடன் முடித்துக் கொண்டார் லயனல் மெஸ்ஸி.
இந்தநிலையில் பிரபல பிரான்ஸ் கால்பந்து அணியான PSG - Paris Saint-Germain உடன் அவர் 2 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். விருப்பப்பட்டால் ஓராண்டு நீட்டிப்பு செய்து கொள்ளவும் அந்த ஒப்பந்தத்தில் வசதி செய்யப்பட்டு உள்ளது.

பார்சிலோனாவிற்கு விளையாடும் போது 10ம் எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்திருந்த மெஸ்ஸி, இங்கு 30ம் எண்ணை அணிந்து விளையாட இருக்கிறார். இவர் பார்சிலோனாவின் ஆரம்ப காலத்தில் இந்த எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடியதே இதற்கு காரணம்.

ஒப்பந்தம் செய்து முடிந்த பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மெஸ்ஸி "எனது புதிய அத்தியாயம் PSG உடன் தொடங்குவது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த அணியையும் இதன் பயிற்சியாளர்களையும் நான் நன்கு அறிவேன். எனவே அணியை மேலும் வலுவாக கட்டமைப்பதில் ஏதாவது சிறப்பை நான் வெளிக்காட்ட விரும்புகிறேன்" என்றார்.

ஏற்கனவே இந்த அணியில் மெஸ்ஸியின் நெருங்கிய நண்பரும் பிரேசில் வீரருமான நெய்மர் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இவருடன் ரியல் மேட்ரிட் அணியில் கேப்டனாக இருந்து அண்மையில் வெளியேறிய ஸ்பெயின் வீரர் செர்ஜியோ ரமோஸ் இந்த அணியில்தான் ஒப்பந்தம் ஆனார். இவர்களுடன் 22 வயதே ஆகும் பிரான்ஸின் கிலியான் பப்பி, ஸ்பெயினின் அச்ரஃப் ஹகிமி, இத்தாலியின் கோல்கீப்பர் ஜியன்லுகி டோனரும்மா ஆகிய இளம் வீரர்கள் PSG அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக விளங்கி வருகின்றனர்.

இதனால் தற்போதைய சூழலில் உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் ஒரு அணியாக PSG உருவெடுத்துள்ளது. இதனிடைடையே வரும் ஞாயிறு அன்று Ligue 1 Uber Eats உள்நாட்டு தொடரில் PSG அணி விளையாடும் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்பாரா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.