சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுக்கும் புதிய திட்டம்!! பதிவுக் கட்டணம் அறிவிப்பு!!

ரயில்களை சுற்றுலா நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என புதிய திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகளை இந்திய ரயில்வேத்துறை வழங்கி வருகிறது. இந்நிலையில், பாரத் கவுரவ் எனும் பெயரில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பயணங்களுக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களோ அல்லது மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்களோ ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான உரிய வாடகையையும் அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயும், மேலும் பல கூடுதல் வசதிகளை பயன்படுத்த 1 கோடி ரூபாயினை வைப்புத்தொகையாக செலுத்தவேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான், உள்ளிட்ட மாநிலங்கள் பங்கெடுத்துக் கொள்ள ஆர்வமுடன் இருப்பதாக மத்திய ரயிவேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.